நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி எனக் கூறி முதியோர் அணியும் கண்ணாடியை விற்று மோசடி!
தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி அருகே உள்ள உப்புகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து, திவாகர். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து தங்களிடம் மாயக் கண்ணாடி இருப்பதாகவும், அதனை கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும்என்றும் கூறி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர்.
அதனை நம்பிய யுவராஜ் தன் நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகியோரிடம் விபரத்தை கூறி, மாயக்கண்ணாடியை வாங்கும் ஆர்வத்துடன் நான்கு நபர்களும் காரில் ரூபாய் ஒரு லட்சம் பணத்துடன் தேனி வந்துள்ளனர்.அவர்களை தொடர்பு கொண்ட அரசமுத்து, திவாகர், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு அருகே வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி அங்கு வந்த யுவராஜிடம் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை பெற்றுக் கொண்ட அரசமுத்து, திவாகர், கண்ணாடி ஒன்றை கொடுத்துவிட்டு வேகமாக சென்றுள்ளனர்.
ஆனால் அந்த கண்ணாடியோ, முதியவர்கள் அணியும் சாதாரண வகைக் கண்ணாடி என்பதை அறிந்த யுவராஜ், தனது நண்பர்களுடன் அரசமுத்து, திவாகர் ஆகியோரை பிடிப்பதற்கு விரட்டியுள்ளனர். ஆனால் பணத்துடன் திவாகர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அரசமுத்து மட்டும் பிடிபட்டார்.