‘மனைவியிடம் காட்டிவிட்டு வருகிறேன்’ - ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்து நூதன மோசடி செய்த நபர்
அண்ணா நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வளையல், செயின், கம்மல் என 9 பவுன் நகைகள், அங்கத் மேத்தா என்ற பெயரில் ஆர்டர் செய்யப்பட்டது. இதையடுத்து நகைக் கடை ஊழியர் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த 9 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு வளசரவக்கம் அடுத்த ராமாபுரத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து நகையை பெற்றுக் கொண்ட அங்கத் மேத்தா தனது மனைவிடம் நகையை காண்பித்து வருவதாக கூறி ஊழியரிடம் இருந்து நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அங்கத் மேத்தா திரும்பி வராததால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ராயலா நகர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அந்த நபரின் அடையாளங்களை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அங்கத் மேத்தாவை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கத் மேத்தா என்பது அவரது உண்மையான பெயர் இல்லை என்றும் சர்தாக் ராவ் பாப்ராஸ் (43) என்பது தான் உண்மையான பெயர் என தெரிய வந்தது.
அந்தமானை சேர்ந்த இவர், தனது குடும்பத்தை அந்தமானில் விட்டு விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறை எடுத்து தங்கி பிரபல நகைக் கடைகளில் ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்து அதனை ஊழியர்கள் கொண்டு வரும்போது தனது மனைவியிடம் காண்பித்து வருவதாகக் கூறி நகைகளை ஏமாற்றி எடுத்துச் சென்று விற்றுள்ளார். பின்னர் அந்த பணத்தைக் கொண்டு உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
இவரிடமிருந்து 7.5 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.