உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகப் படுகொலை… காவல்துறையை ஏவி மிரட்டும் திமுக அரசு : ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்…!!
உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சியினரை பணி செய்ய விடாமல் காவல்துறையினரை ஏவி முடக்கும் திமுக அரசின் செயல்களுக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே, மனித உரிமை மீறலையும் திமுக கையில் எடுத்திருக்கிறது.
திமுக அரசு காவல் துறையை தன் கைப்பாவையாக்கி, அரசு ஊழியர்களை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, தேர்தலில் தில்லுமுல்லுகளைச் செய்து, திறம்பட செயலாற்றக் கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழசு செயல் வீரர்கள், வீராங்கனைகளின் பணிகளை முடக்கும் விதமாக, காவல்துறையை ஏவி அவர்களுடைய பளரிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
குறிப்பாக, தேர்தல் நடக்கக்கூடிய 9 மாவட்டங்களில் கழக உடன்பிறப்புகள் மிக வேகமாகவும், அதே நேரத்தில் விவேகத்தோடும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேகத்தையும், விவேகத்தையும் கண்டு அஞ்சி நடுங்குகின்ற திமுக, காவல் துறையை கைப்பாவையாக மாற்றி கழக உடன்பிறப்புகளின் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களை அச்சுறுத்தலுக்கு உண்டாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்தி, தேர்தல் பணிகளை செய்யவிடாமல் தடுக்கக்கூடிய முயற்சிகளிலே இறங்கி இருக்கிறது.
கழக உடன்பிறப்புகள் எதற்கும் அஞ்சாத, யாருக்கும் அஞ்சாத செயல் மறவர்கள். இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சக்கூடிய பனங்காட்டு நரிகள் அல்ல. சென்று வா என்று சொன்னால் வென்று வரக்கூடடியவர்கள் நம் கழக உடன்பிறப்புகள். இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் முன்னெடுக்காது.
குறிப்பாக, பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் காலம் காலமாக கழகத்தின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரங்கிமலை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான
திரு. பெரும்பாக்கம் 6. ராஜசேகர் அவர்களும், அவரது குடும்பத்தினரும் அந்தப் பகுதியிலே உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர். மக்கள் செல்வாக்கு படைத்த, நியாயமான முறையிலே பொறுப்பைக் கையாண்டு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அன்புச் சகோதார் திரு. பெரும்பாக்கம் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை தேர்தல் பணி செய்யவிடாமல் கழகத்தின் வெற்றியைத் தடுக்கும் விதமாக, காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி, தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கிறது திமுக அரசு.
அதே போல், பல இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகத்தைச் சேர்ந்தவர்களையும், கழக நிர்வாகிகளையும் தேர்தல் பணியாற்றவிடாமல் காவல் துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 10 விதியின் கீழ், பெரும்பான்மையான கழக உடன்பிறப்புகளை அச்சுறுத்தக்கூடிய பணியில் கடந்த சில தினங்களாக காவல் துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த நிகழ்வு தொடர்கின்ற பட்சத்திலே ஜனநாயக வழியிலே மிகப் பெரிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலைக்கு, காவல் துறை எங்களை தள்ளக்கூடாது என்றும், இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் காவல் துறை ஈடுபடக்கூடாது என்றும், நியாயமான வழியிலே சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக அடிப்படையிலே பணியாற்ற வேண்டிய காவல் துறை தற்போது திமுக அரசின் ஏவல் துறையாக மாறி இருப்பது உள்ளபடியே வருத்தத்திற்குரிய செய்தியாக இருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை காவல் துறை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஆளும் அரசின் தேர்தல் விதிமீறலையும், ஜனநாயக விரோதப் போக்கையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மனுவில் உள்ள அனைத்து சாராம்சங்களையும் உறுதியாக நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவை துச்சமென மதிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உயர்நீதிமன்ற உத்தரவை முழுவதுமாக நிறைவேற்றி, நியாயமான முறையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.