“மாணவனை பிரம்பால் அடித்து கால்களால் உதைத்த ஆசிரியர் கைது ” : ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை! (வீடியோ)


 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நந்தனார் அரசுப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை, பள்ளிக்கு சரியாக வரவில்லை எனக் கூறி ஆசிரியர் ஒருவர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக மாணவரை, சக மாணவர்கள் முன்னிலையில், முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார்.

மேலும் அதோடு நிற்காமல், அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைக்கிறார். கொரோனா காலத்தில் மாணவர்களை பள்ளி வர சொல்லிக் கட்டாயப்படுத்தக்கூடாது என அரசு அறிவுறுத்திய போதும் ஆசிரியர் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.