பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல்:முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கைது


 திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இவருக்கும் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த திருவரம்பூர் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் நவல்பட்டு விஜிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து நவல்பட்டு விஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் நவல்பட்டு விஜி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அச்சுறுத்தும் விதமாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு விஜி மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நவல்பட்டு விஜி அணுகினார்.

இந்த வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மீதான மனு நிலுவையில் உள்ள நிலையில் இன்று நவல்பட்டு விஜியை காவல்துறையினர் திடீரென்று கைது செய்தனர்.மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை, நாளை மறுநாள் பிரதோஷம் காரணமாக நீதி மன்றம் செயல்பாடுகள் தாமதமாகும், அதற்கு அடுத்த நாள் மிலாடி நபி காரணமாக நீதிமன்ற விடுமுறை இதன் காரணமாக ஜாமீன் கிடைக்க தாமதம் ஏற்படும் இந்த நிலையில் தான் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று நவல்பட்டு விஜி. கைது செய்யப்பட்ட நவல்பட்டு விஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நவல்பட்டு விஜி கைது செய்ய சென்னையில் இருந்து உத்தரவு வந்ததை அடுத்து ஐஜி அலுவலகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.