விஜய் மக்கள் இயக்கத்தினரின் வெற்றி - அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?

 


ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 115 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் வார்டு உறுப்பினர்கள்தான் என்றாலும் அரசியல் தளத்தில் இந்த வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடிகர் விஜய் அரசியல் விருப்பம் குறித்து விரிவாக விளக்குகிறது இந்த கட்டுரை. 

நானும் நீயும் முயன்றால் சுத்தமாகும் நம்முடைய நாடு, பூனைக்கொரு மணியைக் கட்டிப்பார்க்க நம்மைவிட்டால் யாரு. புதுபாதை போட்டு வைப்போம்' என்ற சுறா பட பாடல் மூலம், 'விஜய் அரசியலுக்கு வரமாட்டார்' என்ற கூற்றை பொய்யாக்கிவிட்டார். அவரே விருப்பம் தெரிவித்த பின்பு, நாம் எப்படி அதை மறுக்க முடியும்?. தொடர்ந்து தனது படங்களில் பாடல்கள், பஞ்ச் டையலாக்குகள் மூலம் அரசியல் ஆசையை பேசிவந்தவர் 'தலைவா' முழு சந்திரமுகியாக மாறினார்.

பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்' என்ற வரிகளின் மூலம் அன்றே 'ரெடியா இருங்க' என்று ரசிகர்களுக்கு குறிப்பால் உணர்த்திவிட்ட விஜய் அதற்கான சமயத்தை எதிர்பார்த்து வந்தார் என்றே சொல்லலாம். அதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக எண்ணும் அவர் தற்போது ரசிகர்களை வைத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆழம் பார்க்கிறார் என்றே கூறப்படுகிறது.

வெறுமனே வரிகள் மூலமாக மட்டும், 'விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு' என்று கூறவிடமுடியாது. அவரின் கடந்த கால செயல்பாடுகளும் அதற்கு ஆதாரங்களாக அமைந்திருப்பதை கவனிக்கவேண்டியுள்ளது. இலங்கை பிரச்னைக்காக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட விஜய் தனது ஈழ தமிழர்களுக்கு தனது ஆதரவு கரம் நீட்டினார். பண மதிப்பிழப்பை எதிர்த்தார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிக்க மூத்த நடிகர்களும், அரசியலில் குதித்த நடிகருமே யோசித்துக்கொண்டிருந்த போது, மெர்சல் படத்தில் தைரியமாக காட்சியை வைத்தார். அதை பிரபலமாக்கும் பொறுப்பை வாண்டடாக ஏற்று அதை சிறப்பாகவும் செய்து முடித்தது தமிழக பா.ஜ.க. தலைவா விஜயின் முகம் அப்போது முற்றிலும் மாறியிருந்தது. அடுத்துவந்த ஒரு விருதுவிழாவில், ‘பிரச்னை வருமென தெரிந்தே பேசினேன்...’ என்று அறிவித்தார் விஜய்.

தமிழ்நாடு விஜயை அப்போதிலிருந்து உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அடுத்து வந்த சர்க்கார் படத்தில் மாநில அரசின் மீதான விமர்சனங்களை வைத்தவர், தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைவது போன்ற காட்சியை வைத்து தன்னுடைய விருப்பத்துக்கு உருவகம் கொடுத்தார். போதாக்குறைக்கு தனக்கு கிடைக்கும் மேடைகளையெல்லாம் அரசியலுக்கான தளங்களாக மாற்றுகிறார். ரஜினியைப்போல, 'எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கு' என கூறி நழுவாமல், 'தகுதியான இடத்தில் தகுதியானவர்களை மக்கள் அமர வைக்க வேண்டும்’ என்று பேசினார்.

இவையெல்லாமே விஜயின் அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடுகள். அதை வைத்து பார்க்கும்போது, தற்போது விஜயின் எண்ணத்துக்கு ஏற்ற களம் அமைந்திருப்பதாக தோன்றுகிறது. அதற்கான முன்னோட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தான் களம் காணாமல், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து அரசியல் ஆழம் பார்த்திருக்கிறார் விஜய் என்றே சொல்லலாம். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். பிரசாரங்கள் பெரிய அளவில் இல்லாமலேயே 169 பேர் போட்டியிட்ட நிலையில் அதில் 110 பேர் வெற்றி கண்டுள்ளனர். 

நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளால் கூட பெற முடியாத வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் சாத்தியமாக்கியுள்ளனர் சில விஜய் ரசிகர்கள் இப்போதே புகழ்பாட ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் தளத்தில் கவனம் பெற்றுள்ள இந்த நிகழ்வுகள் மூலம் அரசியல் சதுரங்கத்தில் தனது அடுத்த சிப்பாயை விஜய் நகர்த்த எத்தனித்துள்ளார் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால், வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வார்டு உறுப்பினர்கள்தான். இவர்கள் உள்ளூரில் அதுவும் தங்களது தெருவில் இருக்கும் செல்வாக்கை பொறுத்தே வெற்றி பெற்றிருப்பார்கள்.