கோவையில் இளைஞர் ஒருவர் போலீசார் மற்றும் போலீஸ் வாகனத்தை தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஜி.ஹெச் காலனி பகுதியில் கடந்த 19ஆம் தேதி இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் சத்தம் போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது அங்கிருந்த தீபக் என்ற இளைஞர் கையில் கத்தியுடம் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர். மேலும், அந்த நபர் குடிபோதையில் இருப்பது போன்று தெரிய வந்துள்ளது. போலீசாரைக் கண்டும், அந்த நபர் தனது அட்டகாசத்தை கைவிடவில்லை.
மாறாக, ‘பேட்டைக்கே நான்தான் ராஜா’ என்பதைப் போல, அங்கிருந்த பெண்களிடம் தனது பெருமைகளை பாடியபடி, போலீசாரை மிரட்டினார். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை கட்டுப்படுத்த முயன்ற போது, அவர் போலீஸார் மீதும், போலீஸ் வாகனத்தையும் கடுமையாக தாக்கினார். இதில், காவலர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை சுக்கு நூறாக்கினார்.
ஒரு கட்டத்தில் அந்த நபரின் அட்டகாசத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர், பொறுமையை இழந்து அந்த நபரை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, கையில் கத்தியுடன் அட்டகாசம் செய்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரை பத்திரமாக மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.