பெரம்பலூர்: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை

 


பெரம்பலூர் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை தலைமை ஆசிரியை, பிரம்பால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் அருகே உள்ள சு.ஆடுதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கிராமப்புரத்தை சேர்ந்த மாணவர்களே இங்கு பெரும்பாலும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சு.ஆடுதுறை பள்ளி தலைமை ஆசிரியை வண்டார்குழலி என்பவர் மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மாணவர்களை பிரம்பால் அடிக்கும் வீடியோ குறித்து விசாரித்ததில் பள்ளிக்கு தாமதமாக வந்த காரணத்தால் தலைமை ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும்,அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

மாணவர்களை எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது என்று கூறப்படும் நிலையில், தலைமை ஆசிரியை பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பிரம்பால் அடித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.