கியூபா நாட்டில் இல்லாதது தமிழகத்தில் இருக்கிறது..! : மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர்
கோவை: கியூபா நாட்டில் இல்லாத மருத்துவ முறை தமிழகத்தில் மட்டுமே இருப்பதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர்காக்கும் உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். பாஷ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக, நோயாளிகளுக்கான மானிட்டர், வென்டிலேட்டர், சரிஞ்ச்பம்ப், என்.ஐ.வி வென்டிலேட்டர்கள், நிறுவப்பட்டுள்ளன. இந்த துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- ஆண்டுக்கு ரூ5.5 கோடி வரை மக்களுக்கு சேவை செய்கிறது ஸ்ரீராமகிஷ்ணா மருத்துவமனை. அதோடு, 8 மணி நேரத்திற்குள் 13 ஆயிரம் பேரை உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்ய வைத்துள்ளது. தீபம் திட்டம் மூலம் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்யை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துகிறது.
பாஷ் நிறுவனம் மூலம் ரூ.57.73 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் உயர்சிகிச்சைக்கான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.தமிழகத்தில் மார்ச் 7ம் தேதி தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற நாளில் கொரோனா பாதிப்பு 25,465 இருந்தது. மே மாதம் 36 ஆயிரமாக உயர்ந்தது.இதனை கண்காணித்த மருத்துவர் குழுவினர் அடுத்த சில வாரங்களில் இந்த பாதிப்பு நிச்சயம் 70 ஆயிரத்தை கடக்கும் என்றனர். ஆனால் தற்போது முற்றிலும் குறைந்து 1200க்கு வந்துள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு தனியார் மருத்துவமனைகளும் இணைந்து கரம் கொடுத்துள்ளன.கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன் வந்த பின் கொரோனாவை படிப்படியாக கட்டுப்படுத்தினார். அரசு மருத்துவமனையில் 86% பேர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். தனியார் மருத்துவமனையில் 6% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
படிப்படியாக கோவை மாவட்டம் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக மாறும்.புதுக்கோட்டை அரியலூர் 100% தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாவட்டங்களாக மாறியுள்ளன.இது தவிர 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் 700க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களை உள்ளடக்கி உள்ளன.
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்பதை எதிர்பார்த்திருக்கிறோம். கோவை மிக மிக பாதுகப்பான வட்டத்திற்கு உள்ளது.சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவிலேயே கோவையில் தான் முதன் முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர்ப்பட்டது
தமிழகத்தில் தொற்றா நோய்களால் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தால் இந்த உயிரிழப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது வரை 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் அடுத்த 4 மாதங்களில் ஒரு கோடி பேர் பயனடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.உலகில் எந்த நாட்டிலும் வீடு தேடி இலவச மருத்துவம் என்ற திட்டமில்லை. கியூபா போன்ற நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப் படுவதாக பல கருத்துக்கள் இருக்கிறது. ஆனால் உலகிலேயே தமிழகத்தில் தான் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், பாஷ் நிறுவன பொது மேலாளர் சைஜூ, எஸ்.என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.