மாத்திரைகளை விற்கும் மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை - காவல் துணை ஆணையர்
குற்றவாளிகளுக்கு போதைக்காக மாத்திரைகளை விற்கும் மருந்தகங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னை திருவிக நகரில் நடந்தது. இந்த சைக்கிள் பேரணியை புளியந்தோப்பு காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணனும் மாணவர்களுடன் சைக்கிள் ஓட்டி போதைப்பொருளிள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் பேசும்போது “மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரி அருகில் போதைப்பொருள் விற்கப்படுவதை கண்டறியும் விதத்திலும் அதுபோல நடந்தால் மாணவர்களே காவல் துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம்.
மெடிக்கல் ஷாப்களில் போதைக்காக மாத்திரைகள் விற்கப்படுவதை தடுக்கும் விதமாக மருந்தகங்களின் விற்பனையாளர்களை நேரில் அழைத்து அறிவுரைகளை கொடுத்துள்ளோம். மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகள் விற்கக்கூடாது, போதைக்காக சில மாத்திரைகளை அதிக விலைக்கு குற்றவாளிகளுக்கு விற்கக்கூடாது. அப்படி விற்றால் அந்த மெடிக்கல் ஷாப்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம்” என்று கூறினார்.