பட்டா மாறுதலுக்கு 18 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

 


திருவாரூர்: திருவாரூர் அருகே பட்டா மாறுதலுக்கு 18ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் காவல்துறை கைது செய்தனர்.

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஆணை வடபாதி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பாபு என்பவருடைய தந்தை சாரங்கன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா கோரி கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்து இருந்தார். 

இதற்கு பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் சாரங்கன் மகன் மனோஜ் பாபுவிடம் 3000 முதலில் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் 3000 வாங்கிக்கொண்டு பட்டா வழங்காமல் மீண்டும் 18 ஆயிரம் ரூபாய் கிராம நிர்வாக அலுவலர் பணம் கேட்டுள்ளார்.

அதனை அடுத்து மனோஜ் பாபு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ரசாயனம் தடவிய பணத்தை மனோஜ் பாபுவிடம் கொடுத்து பாலசுப்பிரமணியனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். அதனடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாலசுப்பிரமணியனை பிடித்தனர். 

அவரிடமிருந்து ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சாரங்கன் இடத்திற்கான பட்டா ஆகியவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை  காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.