மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது CAA” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

 இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019-ஐ இரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முன்மொழிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“பேரவைத் தலைவர் அவர்களே, குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டபூர்வமான உரிமை. இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின்படி, இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்தக் குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம், அனைவருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு ஆகிய அம்சங்களை அரசு மறுக்க முடியாது. 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், இன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்தத்தில், மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது. அதன்படி பார்க்கும் போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, {Citizenship (Amendment) Act, 2019} என்று பெயர் சூட்டப்பட்டது.

பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இசுலாமியர் இதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர். இது மக்களை மதரீதியாகப் பிரிக்கிறது என்பதால், இந்தச் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. இந்தச் சட்டமானது, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பாக மதச்சார்பற்ற தன்மைக்கு, முற்றிலும் எதிரானதாகும் என்ற காரணத்தினாலும், அது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல என்பதாலும் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

“அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது CAA” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

இச்சட்டத்தினை எதிர்க்கும் வகையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, அதனை எதிர்த்து இந்த மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், அக்கோரிக்கை முந்தைய அரசால் ஏற்கப்படவில்லை. எனினும், இது தொடர்பாக, இச்சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் வாக்களித்திருக்கின்றன.

அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. இது ஏற்கெனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கிப் பார்ப்பதாகும்.

அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானது ஆகும். அதிலும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் வரலாமென்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்?

இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து

முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது. ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட

வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு மாறானது இந்தச் சட்டத் திருத்தம். இந்தச் சட்டத் திருத்தம், இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழ்விடச் சூழல் எனப் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்தாலும், இணைந்து வாழும் மக்களைப் பிரித்து வைக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

“அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது CAA” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா மிளிர்வதற்குக் காரணம் " வேற்றுமையில் ஒற்றுமை' எனும் தத்துவம்தான். பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட நாடாக இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மதம், இனம், மொழி, மாநில வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவின் சுதந்திரம் என்பது, அனைவரும் சேர்ந்து போராடியதால் கிடைத்தது. இமயம் முதல் குமரி வரையிலான ஒற்றுமையால் அடைந்த வெற்றியாகும். இத்தகைய உன்னதமான நல்லிணக்க மரபிற்குன ஊறுவிளைவிக்கும் வகையில், இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது; இரத்து செய்யப்பட வேண்டியது என நாம் கருதுகிறோம். மேலும், இச்சட்டத்தின் நீட்சியாக தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register) தயாரிக்கும் பணியினையும், அதனடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) தயாரிப்பதையும் ஒன்றிய அரசு முழுவதுமாகக் கைவிடவேண்டும் எனவும் நாம் கருதுகிறோம்.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில், இணக்கமாக ஒன்றிணைந்து வாழும் இந்திய மக்களிடையே மத. இனரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் இரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தினை நிறைவேற்றித் தர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தத் தீர்மானத்தைத் தற்போது அவையில் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

"ஒன்றிய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது.

மக்களாட்சித் தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிருவாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)