சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

 


கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிறு குன்றா வனப் பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இங்கு வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரனின் விருந்தினர்களாக, சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் நேற்றிரவு தங்கி உள்ளனர். இதனிடையே இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் இருவரும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி வனப் பகுதியில் சுற்றியதாக தெரிகிறது. இதனை இரவு நேர ரோந்து பணியில் இருந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் பார்த்துள்ளார்.

இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் சுற்றுலா பயணிகளை கண்டித்ததாகவும், இரவு நேரத்தில் வன விலங்குகள் அதிகம் நடமாடுவதால் வெளியில் சுற்ற வேண்டாமென கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வனச் சரகருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் சுற்றுலா பயணிகளை  வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பரிச்சமற்ற பகுதியில், இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தி வெளியற்றதாகவும், மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் பேரில் வால்பாறை காவல் துறையினர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்தனர். இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


சுற்றுலா பயணிகள் நீதிபதி ஒருவரின் உறவினர்கள் எனவும், அதன் காரணமாக வனச்சரகர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை வனச் சரகரை முறையாக விசாரிக்காமல் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி, அட்டகட்டி சோதனைச் சாவடி முன்பு 200க்கும் மேற்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வனத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனச்சரகரை மிரட்டியதோடு, நீதித் துறையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனச்சரகரை கைது செய்து இருப்பதாக வன ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

வனச்சரகரை கைது செய்ததை கண்டித்தும், வனப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலம் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற ஊழியரின் புகாரின் பேரில் வனச்சரகர் கைது செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் வன ஊழியர்கள் போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)