குண்டும் குழியுமான சாலைக்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதா..? வாகன ஓட்டிகள் அதிருப்தி..!!
கரூர் : சாலை பராமரிப்பு செய்யாமல், குண்டும் குழியுமாக இருக்கும் சாலைக்கு சுங்க கட்டணத்தை அதிகரித்து வசூலிப்பதற்கு வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கரூர் – திருச்சி செல்லும் சாலையில் உள்ள மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், கரூர் – திண்டுக்கல் செல்லும் சாலையில் உள்ள வேலம் செட்டியூர் பகுதியில் என மாவட்டத்தில் 2 சுங்கச்சாவடி செயல்பட்டு வருகின்றன.
மணவாசி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மாயனூர், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யாத நிலையில், அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டண ரூ. 5 முதல் ரூ.10 வரை உயர்த்தியிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணவாசி சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப் வாகனங்களுக்கு முறையே ரூ.45, ரூ.70 என அப்படியே நீடிக்கிறது. கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கான ஒரு மாதத்திற்கான பலமுறை பயணக் கட்டணம் ரூ.1,380லிருந்து ரூ.1420 ஆகவும், இலகுரக வர்த்தக வாகன ஒரு முறை கட்டணம் ரூ.80லிருந்து ரூ.85ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.120லிருந்து ரூ.125 ஆகவும், ஒரு மாதத்திற்கான பலமுறை பயணக் கட்டணம் ரூ.2,415லிருந்து ரூ.2,490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் டிரக் ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.160லிருந்து ரூ.165ஆகவும், ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.240லிருந்து ரூ.250 ஆகவும், ஒரு மாதத்திற்கான பலமுறை பயணக் கட்டணம் ரூ.4,830லிருந்து ரூ.4,975 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. பல அச்சு (2 அச்சுகளுக்கு மேல்) கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.260லிருந்து ரூ.265 ஆகவும். ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.390லிருந்து ரூ.400 ஆகவும், 1 மாதத்தில் பலமுறை பயணக் கட்டணம் ரூ.7,765லிருந்து ரூ.7,995 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.5ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.1,165 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மணவாசி பகுதியில் இயங்கும் சுங்கச்சாவடி உட்பட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காத நிலையில், வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணத்தை அதிகரித்து வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.