தொழிலாளி கோவிந்தராசு மர்ம மரணம்… நீதிமன்ற உத்தரவால் திமுக எம்பிக்கு சிக்கல் : ராமதாஸ் பாராட்டு!!
சென்னை : மர்மமான முறையில் உயிரிழந்த முந்திரி ஆலை தொழிலாளியின் உடலை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பாத நிலையில், கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டதாக திமுக எம்பி ரமேஷின் உதவியாளரிடம் இருந்து தகவல் வந்துள்ளது.
இதனால், அதிர்ந்து போன குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். மேலும், திமுக எம்பி டி.ஆர்.வி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தில் உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்காமல் ஓய மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, கோவிந்தராசு அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது உடலை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கையை ஏற்று ஆணை பிறப்பித்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பண்ருட்டி மேல்மாம்பட்டு பா.ம.க நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது!
உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும், மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நடந்தது கொலை தான் என்பதற்கான குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன்பிறகாவது கொலை வழக்காக மாற்றி எதிரிகள் கைது செய்யப்படுவரா..?, எனக் குறிப்பிட்டுள்ளார்.