கோடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? எஸ்டேட் மேலாளரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்காக ஆஜரானர். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை, கொள்ளை சம்பவம் நடந்த நாளான்று என்ன நடந்தது?, என்னென்ன பொருட்கள் திருடப்பட்டது? உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், கூடுதல் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் கூடுதல் விசாரணை செய்தனர்.
இதனிடையே கோடநாடு வழக்கில் சாட்சிய விசாரணையில் விடுபட்ட தடவியல் நிபுணர் ராஜாகோபால், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர் மற்றும் கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை செப்டம்பர் 2 ம் தேதி முதல் விசாரிக்க நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நேற்று வழக்கு விசாரணைக்காக வந்த போது மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் சம்மன் அனுப்பததால், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராஜவில்லை. காவல் துறையினரின் கூடுதல் விசாரணைக்கு 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதி சஞ்சய் பாபா, அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.