ஆயுதங்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம்: ஆபரேஷன் டிஸ்ஆர்ம்-க்குப் பிறகு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு…!!
சென்னை: அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் முழு விவரங்களை சேகரிக்க வேண்டும் என அனைத்து போலீஸ் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடந்த கொலைச் சம்பவங்களுக்குப்பிறகு கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆபரேஷன் டிஸ்ஆர்ம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 3,325 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1110 கத்திகள் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை தயார் செய்யும் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுடன் ஒவ்வொரு காவல் நிலையம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும்.
சிசிடிவி கேமராக்களை கடை, பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல் துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.