நீட் தேர்வு எழுதிய மாணவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயம்.....

 


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நீட் தேர்வு பயத்தினால் மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கெந்தரை கிராமத்தை சார்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் மாதன். இவரது மனைவி அம்பிகாவதி. இவர்களுக்கு  19 வயதில் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். விக்னேஷ் 12ம் வகுப்பு படித்து விட்டு, நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வு எழுதுவதற்காக தனது தாய்  அம்பிகாவதியுடன், விக்னேஷ் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள விஜயலட்சுமி நகரில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். 

கடந்த வருடம் எழுதிய நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த 12-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் தேர்வை விக்னேஷ் எழுதியுள்ளார். இதையடுத்து வீட்டில் விக்னேஷ் சோகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம்  வீட்டில் இருந்து விக்னேஷ் திடீரென வெளியேறினார். விக்னேஷ் வீட்டில் இல்லாததால், அவரது தாயார் அம்பிகாவதி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது படுக்கையறையில்  விக்னேஷ் பன்னிரண்டு முப்பது மணிக்கு தனது டைரியில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.

அதில், “அப்பா அம்மாவிற்கு நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் குடுக்க இயலாது. இந்த முறையும் நீட் தேர்வில் ஏமாற்றம்தான் உண்மையை கூற எனக்கு பயமாக இருக்கிறது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பதற்கோ, உங்களை அப்பா அம்மா என்று அழைப்பதற்கோ எனக்கு தகுதி இல்லை. சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் என் வெற்றிப் பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னை தேட வேண்டாம். இன்னும் சில வருடங்களில் திரும்பி வருவேன் வெற்றி பெற்றவனாக இது சத்தியம். 

இப்படிக்கு உங்கள் அன்பு மகன்” என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது தாயார் அம்பிகாவதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். மாணவர் எழுதி வைத்த கடித்தத்தை கைப்பற்றி, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் காணாமல்போன மாணவன் விக்னேஷை தேடி வருகின்றனர். கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோம்  என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்