தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகள் வேட்டை.. விடிய விடிய நடந்த வேட்டையின் பின்னணி என்ன?

 




வேட்டையாடு விளையாடு படத்தில் காவல் அதிகாரியான நாயகன் கமல்ஹாசன் நடத்தும் அதிரடி ஆய்வு வேட்டையைப் போல, தமிழகம் முழுவதும் நடுநிசியில் போலீசார் களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்கள், வழக்குகளில் தேடப்பட்டுவந்தவர்கள் என மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் போலீசார் களமிறங்கினர். முதலில் வேட்டை வடசென்னையில்தான் தொடங்கியது என்கிறார்கள் காவல்துறையினர். பின்னர் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு தொடங்கப்பட்டன.

சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ரவுடிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் 717 ரவுடிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள மற்ற மாநகர பகுதிகளிலும், மாவட்டங்களிலும் விடிய விடிய ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. இந்த சோதனையில் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டனர். இதுவரை 600க்குமேற்பட்ட ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கைதான ரவுடிகளிடமிருந்து 350 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆயுதங்களை பறிமுதல் செய்தால், உடனே அடுத்தடுத்து குற்றங்களில் ஈடுபடுவது குறையும் என்றும் தமிழக காவல்துறை கருதுகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

ஏபிளஸ், ஏ, பி, சி என 4 வகைகளாக ரவுடிகளை போலிசார் வகைப்படுத்தி, பட்டியலிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள ரவுடிகள் யார் யார்? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ள வழக்குகள் எத்தனை? குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படைகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? எனவும் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுகிறது முன்விரோத கொலைகளை தடுக்க இந்த ஆபுரேசன் முக்கியமானது என்கிறார் மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

தமிழகம் முழுவதும் ரவுடிகளை ஒழிக்கும் பணிக்கென்று மேலும் 2 பிரிவுகளை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது போன்ற அதிரடி சோதனைகளும்,கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். அதேசமயம், உரிய நேரத்தில் கைது செய்து, வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, தண்டனை வாங்கித்தருவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என இது போன்ற ஆபுரேசன்களை செய்ய தேவையிருக்காது என்கிறார்கள் ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகள்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்