கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறிய திமுக பிரமுகர்: கைது செய்து சிறையில் அடைப்பு…பொள்ளாச்சியில் அதிர்ச்சி!!
பொள்ளாச்சி: நாட்டுக்கல்பாளையம் அருகே பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த திமுக கிளை செயலாளர் காளியப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள காசிப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். 45 வயதான இவர், பொள்ளாச்சி திமுக கிளை செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், நாட்டுக்கல் பாளையம் பகுதியில் கால்வாய் கட்டும் பணியை டெண்டர் எடுத்து பணி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி நாட்டுக்கல்பாளையம் பகுதியில் கணவரை இழந்து தனியாக வசிக்கும் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட காளியப்பன் தப்பிஓடி தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், திமுக பிரமுகர் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, காளியப்பனை கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் கூறியதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.