‘கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு’ அரெஸ்ட் செய்ய ஆதாரமான ஐந்து செல்போன்கள்..!
கோடநாடு வழக்கு இறுதி கட்டத்தை எட்டி முடிவடைய இருந்த நிலையில், திடீர் திருப்பமாக மீண்டும் கூடுதல் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளன.
கடந்த கால அதிமுக ஆட்சியில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கும் நோக்கிலேயே விசாரணைகள் நடைபெற்றதும், சாட்சியங்களை முறையாக சேகரிக்காமல் தவறவிட்டதும் தற்போது நடந்து வரும் ஆய்வில் அம்பலமாகிவருகிறது. வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடைகேட்டு சாட்சியான அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் உயிர்நாடியாக இருக்கும், முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் 5 செல்போன்கள் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. சாதாரண ஒரு வழக்கில் கூட குற்றவாளிகளை கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும் செல்போன், கோடநாடு வழக்கை பொறுத்தவரை இந்த சம்பவம் போல மர்மமானதாகவே இருக்கிறது.
அந்த ஐந்து செல்போன்கள்
இந்த வழக்கு கடந்த அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டபோது, வழக்கின் முக்கிய ஆதாரமாக விளங்கும் 5 செல்போன்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்படி பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களோ, அது தொடர்பான பதிவுகளோ எந்த ஆவணங்களிலும் இல்லை என்பதும் நீதிமன்றத்திலும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் கூறப்படாததும் இந்த வழக்கில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
5 செல்போன்கள் யாருடையது..?
- செல்போன் - 1
கோடநாட்டில் கொலை – கொள்ளை சம்பவம் நடந்த ஏப்ரல் 24, 2017ஆம் நாளிலிருந்து சரியாக 4வது நாளில் அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனராஜ் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அப்போது அவர் பயன்படுத்திய செல்போன், விபத்து நடந்த காரில் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால், அப்படி ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் போலீசார் பதிவு செய்யவில்லை.
- செல்போன் – 2
ஏப்ரல் 29ஆம் தேதி விடியற்காலையில், அதாவது கனராஜ் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த அடுத்த நாள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயானின் கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சயானின் மனைவியும் மகளும் உயிரிழக்கின்றனர், சயான் படுகாயங்களுடன் உயிர் பிழைக்கிறார். அப்போதும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சயான் பயன்படுத்திய ’ஐ-போனை’ போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதும் எந்த ஆவணங்களிலும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த இரண்டு செல்போன்கள்தான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரம். கனகராஜூம், சயானும் யார் யாரிடமெல்லாம் தொடர்புகொண்டு பேசினார்கள், யாரிடமிருந்து, எங்கிருந்தெல்லாம் இவர்கள் இருவருக்கும் அழைப்பு வந்திருக்கிறது என்பதை இந்த செல்போன்களை ஆராய்ந்தாலே எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அப்படி கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த இரு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் வழக்கில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
- செல்போன் – 3 & 4
2019 ஜனவரி மாதத்தில் டெல்லியில் வைத்து, தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் கோடநாடு கொலை வழக்கில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சயானும், மனோஜூம் பேட்டிக் கொடுக்கின்றனர். உடனடியாக டெல்லி சென்ற தமிழ்நாடு காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர். அப்போதும் சயானும் மனோஜூம் பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. வழக்கம்போல் இந்த 2 செல்போன்களும் வழக்கின் சாட்சியங்களில் இருந்து மாயமாகின்றன.
டெல்லியில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட சயானையும், வாளையார் மனோஜையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், இருவரும் விடுவிக்கப்படுகின்றனர்.
- செல்போன் – 5
தமிழ்நாடு போலீஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் ஊடக நிறுவனங்கள் தொடர்புகொண்டு பேட்டி எடுத்த நிலையில், சயானும், மனோஜூம் இனி ஊடகங்களில் பேட்டி கொடுக்க விடக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடிவு செய்கிறது தமிழ்நாடு போலீஸ். ஏற்கனவே டெல்லியில் கைது செய்தபோதே சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்த நிலையில், அவர்களை என்ன சொல்லி, எதன் அடிப்படையில் கைது செய்துவது என யோசித்த போலீஸ். கோவையில் சயானும், மனோஜூம் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரான சாந்தா என்பவரை வைத்தே ஒரு புகார் கொடுக்க வைக்கின்றனர். அவரும் வேறு வழியின்றி, இருவரும் சேர்ந்து தன்னை முறைத்து பார்த்து, மிரட்டியதாக கூறி போலீசில் புகார் அளிக்கிறார். இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு கேரளாவில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. கைது செய்தது மட்டுமல்லாமல் விடுதி உரிமையாளரை முறைத்து பார்த்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தையும் பயன்படுத்தி ஜாமீனில் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைத்தது. அப்படி கைது சயானை கைது செய்தபோதும் அவர் பயன்படுத்திய மற்றொரு செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்குறிப்பிட்ட அந்த 4 செல்போன்கள்படியே இந்த 5வது செல்போனையும் கணக்கில் காட்டாமல் பதுக்கப்பட்டது.
இப்படி பறிமுதல் செய்யப்பட்ட இந்த 5 செல்போன்களும்தான் இந்த வழக்கில் அடிநாதம், அடிப்படை ஆதாரம். இவற்றை ஆய்வு செய்தாலே வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிக்கிவிடுவார்கள். ஆனால், அதற்கு கொஞ்சமும் இடம் அளிக்காமல், ஆதாரங்களை திட்டமிட்டே மறைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலர், இந்த 5 செல்போன்களையும் திட்டமிட்டே வழக்கின் சாட்சியங்களில் இருந்து மறைத்துள்ளது தற்போது நடந்து வரும் விசாரணையில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் எங்கே ?
கனராஜ், சயான், மனோஜ் ஆகியோரிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தது யார் ? கைப்பற்ற செல்போன்களை யாரிடம் அப்போது போலீசார் ஒப்படைத்தார்கள் ? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாணும் நோக்கில், தற்போது போலீஸ் விசாரணை வளையத்தில் பல காவல்துறை அதிகாரிகளே சிக்கி, திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் மர்மங்கள் அவிழ்ந்து, முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. பார்க்கலாம்..!