“யூ-ட்யூபில் பொய் செய்தி வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுங்க” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!


 “ஊடகங்களில் பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது நாட்டுக்கு அவப்பெயரை விளைவிக்கும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று தொடக்க காலத்தில், தொற்று பரவல் அதிகரிப்புக்கு தப்லீக் ஜமாத் மதக் கூட்டமே காரணம் என செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சமூக ஊடகங்களைச் சாடியுள்ளார்.

இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “அதிகாரமிக்கவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே செய்தி இணையதளங்கள் கேட்கின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் அமைப்புகளுக்கு எதிராகவும் தங்களுக்குத் தோன்றியதை எழுதுகிறார்கள்.

ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு பொறுப்பே இல்லை. நாட்டில் நடைபெறும் அனைத்தையும் சில ஊடகங்கள் மதவாத ரீதியாக திரிக்கின்றன. இதுதான் இங்கு பிரச்சனை. நாட்டுக்கு இதனால் அவப்பெயர் ஏற்படும்.” எனத் தெரிவித்தார்.

அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'ஊடகங்களில் மதவாத கருத்துகள் மட்டுமல்ல, திட்டமிடப்பட்ட பொய்யான செய்திகளும் வெளியிடப்படுகின்றன' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தப்லீக் ஜமாத் தொடர்பான பொய்யான செய்திகளை தடுக்க அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பொய்ச் செய்திக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.