வாணியம்பாடி ம.ஜ.க பிரமுகர் கொலை சம்பவம் : புகார் மீது மெத்தனம்… இரு காவலர்களுக்கு எழுந்த சிக்கல்..!!


 திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே மனித நேய ஜனநாய கட்சியின் முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம் (40). இவர் மனிதநேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தவர், சமூக ஆர்வலரும் ஆவார். வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு நேற்று மாலை 6.30 மணிக்கு சென்று தொழுகை முடித்து விட்டு, தனது 7 வயது குழந்தை உடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தனர்.

தப்பியோடிய கொலையாளிகளில் இருவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டீல் இம்தியாஸ் என்பவர் கஞ்சா விற்று வருவது தொடர்பாக போலீஸாருக்கு காட்டி கொடுத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வசிம் அக்ரம் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

டீல் இம்தியாஸ் மீது புகார் அளிக்கப்பட்ட போதே, வசீம் அக்ரமுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜுன் மாதம் போலீஸில் வசீம் அக்ரம் புகார் அளித்தும், டீல் இம்தியாஸை கைது செய்யப் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒருவேளை முன்கூட்டியே கைது செய்யப்பட்டிருந்தால் வசீம் அக்ரம் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வசீம் அக்ரமின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பி சக்கரவர்த்தி சென்னை சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளார். வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.