புதிய ஆளுநருக்கு எதிர்ப்பு : யாருக்காக, அழகிரி கதறுகிறார்?…தமிழக பாஜக உடைக்கும் ரகசியம்

 


தமிழக ஆளுநராக பதவி வகிக்கும் பன்வாரிலால் புரோஹித், அண்மையில் பஞ்சாப் மாநில முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் 69 வயது ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என். ரவியை தமிழகத்தின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

தமிழக ஆளுநர் நியமனம் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து

அவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ், உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

கே.எஸ் அழகிரி எதிர்ப்பு

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி மட்டும் வரவேற்பு தெரிவிப்பதற்கு பதிலாக ஆளுநரின் நியமனம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். அதற்காக நீண்ட அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார் இதில் ஒரு விசித்திரத்தையும் காணமுடிகிறது.

அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவியின் படிப்பு, அவர் மத்திய அரசில் ஆற்றிய பணிகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கிவிட்டு அதன் பின்னர் தனக்கு எழுந்துள்ள ஐயங்களை கே.எஸ்.அழகிரி அடுக்கிக்கொண்டே போகிறார்.

“இவர், 1976-ம் ஆண்டு கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு 2012 -ம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014-ம் ஆண்டு முதல் கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018-ல் தேசியப் பாதுகாப்பு
துணை ஆலோசகராகவும் பணியாற்றினார்” என்று அழகிரி மினி பயோடேட்டாவே தருகிறார்.

இப்படி ஒரு ஆளுநரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு, அதன்பின்னர் வசைபாடும் அவருடைய அரசியல் நாகரீகம் புதுமையாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநர் ரவி பற்றி பெரும்பாலான ஊடகங்கள் விரிவான வாழ்க்கை வரலாற்றை கூறிய பிறகு கே.எஸ். அழகிரி எதற்கு அதை நினைவூட்டுகிறார் என்பதை அவருடைய அறிக்கையின் பிற்பகுதியில் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் அவருடைய வயிற்றில் புளியைக் கரைப்பது போன்ற விஷயங்களும் நிறையவே தென்படுகின்றன.

கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். உதாரணத்துக்கு, முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரண் பெடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது.

ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்

அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசைச் செயல்படவிடாமல் நித்தம் இடையூறு செய்து மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட அவரை, கடும் எதிர்ப்பு காரணமாக மோடி அரசு திரும்பப் பெற்றது.

அந்தவகையில், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ? என்று நான் சந்தேகப்படுகிறேன்.

தமிழகத்தை அச்சுறுத்த நினைக்கும் பாஜக

தமிழகத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக, ஆளுநர் நியமனத்தின் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசியல் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்கவும் முயல்கிறது. இதற்காக ஆர்.என்.ரவியை பகடைக்காயாகப் பயன்படுத்த மோடி அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டில், நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.

சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பதுதான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர், ஆர்.என்.ரவிஇத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன்” என்று கொந்தளித்து இருக்கிறார்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அதாவது, கே.எஸ். அழகிரியின் அறிக்கை ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியின் கருத்தாக தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுமளவிற்கு தன் மீதான மதிப்பை அவர் வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார்.

“ஆளுநராக ரவி இன்னும் பொறுப்பேற்கவில்லை. அவர் தமிழகத்திற்கு வரவும் இல்லை. அவர் தமிழகத்தில் பதவி ஏற்பதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. ஏனென்றால் தமிழகத்தில் இருந்து விடைபெற இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு 14-ம் தேதிக்கு பிறகுதான் சென்னையை விட்டு புறப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது”

“இப்படி ஒருவர் பொறுப்பேற்கும் முன்பாகவே அவருடைய செயல்பாடுகள் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்பதை அறியாத நிலையிலேயே யூகங்களின் அடிப்படையில்
கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. கே.எஸ். அழகிரியின் அறிக்கை அவர் அரசியலில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதையே உணர்த்துகிறது.

தமிழக இளைஞர்களிடம் பிரிவினைவாத சிந்தனைகள் தூண்டிவிடப்படுவதாக கூறப்படுவதை தடுப்பதுதான் புதிய ஆளுநரின் முதல் வேலையாக இருக்கும். மேலும் தமிழகத்தின் அருகில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை உள்ளது. இதன் காரணமாக வங்காள விரிகுடா கடல் பகுதியில் சீனாவின் கடற்படை நடமாட்டம் ஏற்படலாம் என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு வலுவாக உள்ளது. அதை கண்காணிப்பதற்கு உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ரவி தமிழகத்தின் ஆளுநராக இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூட மத்திய அரசு நினைத்து அவரை இங்கே நியமித்து இருக்கலாம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மாநில பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “புதிய ஆளுநரை கண்டு அழகிரி ஏன் பயப்படுகிறார் என்பது புரியவில்லை. ஆனால் உளவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் என்பதால் விடை கிடைக்காமல் உள்ள சில கேள்விகளுக்கு பதிலை பெறுவதற்கான முயற்சிகளில் புதிய ஆளுநர் ஈடுபடலாம். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரசில் பணம் கொடுத்தவர்களுக்கு கட்சியில் சீட் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஜோதிமணி எம்பி பகிரங்கமாகவே வைத்தார். அப்போது சுமார் 45 கோடி ரூபாய் வரை கை மாறியதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது. இந்தப் பணம் எப்படி யார் யாருக்கு போனது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல் 8 வருடங்களுக்கு முன்பு ஹாங்காங் நாட்டிலிருந்து துபாய் வழியாக 1210 கோடி ரூபாய்க்கு வைரம் வாங்கப்பட்டதாக போலி ரசீது தயாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. அதையும் அவர் தோண்டித் துருவலாம். இதேபோல் சீனாவின் தயவால் ஆட்சி நடக்கும் இலங்கையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் 27 ஆயிரம் கோடி ரூபாயை தனது சிங்கப்பூர் நிறுவனம் வழியாக தொழில் முதலீடு செய்திருப்பது பற்றியும் அந்தப்பணம் அவருடையதுதானா, பினாமியால் முதலீடு செய்யப்பட்டதா? என்பது குறித்தும் தனது உளவுத்துறை அனுபவத்தின் மூலம் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘சைலன்ட்’டாக அம்பலப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்யலாம். இதனால்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் மேலிட தலைவர்களும் ரவியின் நியமனத்தால் பீதியடைந்து இருக்கிறார்கள். எனவேதான் புதிய ஆளுநர் ரவி என்றாலே காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேரும் கலக்கம் அடைகின்றனர்” என்று அந்த நிர்வாகிகள் உண்மையை உடைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்