சீட்டு கொடுக்கலைனா உன் சீட்டு காலி : அரசுக் கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்!!
கடலூர் : அரசுக் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்து விசிக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே இயங்கி வரும் அரசு கலை கல்லூரி முதல்வர் தென்னரசு என்பவர் நேற்று காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், விடுதலை சிறுத்தை கட்சியின் விவசாய சங்க பிமுகராக உள்ள பசுமைவளவன் என்பவர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் மன உளைச்சலை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அரசு கலைக் கல்லூரியில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்ககை நடைபெற்று வரும் நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற விசிக தொகுதி செயலாளர் செல்லப்பன் என்பவர் மாணவர் ஒருவருக்கு சேர்க்கைக்க சிபாரிசு கடிதம் வழங்கியதாக தெரிகிறது.
ஆனால் அந்த கடிதத்தை பெற கல்லூரி முதல்வர் தென்னரசு நிராகரித்துள்ளார். இதையடுத்து காட்டுமன்னார் கோவில் விசிக நிர்வாகி பசுமைவளவன் கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விசிக பிரமுகர் பசுமைவளவன், தென்னரசை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த ஆடியோ பதிவின் அடிப்படையில் காட்டுமன்னார் கோவில் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசிக பிரமுகர் பசுமை வளவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல விசிக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்ததை தட்டிக் கேட்ட காவல்துறையை, நான் யார் தெரியுமா எங்களுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் என கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே ஆளும் கட்சியில் உள்ள நிர்வாகிகள் தமிழகத்தில் குற்றச்சம்பவங்களை ஏற்படுத்தி அமைதிப்பூங்காவை களங்கப்படுத்தி வரும் நிலையில் விசிகவினர் கொலை மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது, திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.