திமுகவுக்கு அடிபணிந்த விசிக… ஸ்டாலின் தலையீட்டால் காவல்துறைக்கு எதிரான போராட்டம் வாபஸ்!!

 சென்னை : காவல்துறைக்கு எதிராக அறிவித்த போராட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சி வாபஸ் பெற்றது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் கே.மோரூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நடுவதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால், தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கே.மோரூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தடையை மீறி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தடுத்துள்ளனர். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல மாறியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய நிலையில், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், காவல்துறைக்கு எதிராக விசிக நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.


இது தொடர்பான அறிவிப்பை முதலில் வெளியிட்ட விடுதலை சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, “காவல்துறைக்கு எதிராக நாளை சேலத்திலும், நாளை மறுநாள் மதுரையிலும் நடைபெறுவதாக இருந்த போராட்டம் முதல்வரின் கோரிக்கையை ஏற்று தள்ளிவைக்கப்படுகிறது – எழுச்சித்தமிழர் திருமாவளவன் அறிவிப்பு,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரைத் தொடர்ந்து, திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சேலத்திலும் அக்-01 மதுரையிலும் நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. தனது இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து சென்னைக்குத் திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பேச அழைத்திருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, திமுகவின் குறைகளையும், தவறுகளையும் தோழமை சுட்டுதலின் மூலம் சுட்டிக் காட்டி வரும் திருமாவளவன், கட்சிக் கொடிக்கம்பத்தை வைக்க அனுமதி மறுத்ததற்காக, காவல்துறையை கண்டித்து மட்டுமே போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுவே பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. கடந்த ஆட்சியின் போது தொட்டதுக்கு எல்லாம் அதிமுக அரசே காரணம் எனக் குற்றம்சாட்டி வந்த திருமாவளவன், தற்போது முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை பிரித்து பார்ப்பது ஏன்..? என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் தலையீட்டால் போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பது, முழுக்க முழுக்க திமுக கட்டுப்பாட்டில் திருமாவளவன் இருப்பதை உணர்த்துவதாக கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)