அதிமுக விவகாரம்: பொதுக்குழு வழக்கில் அதிமுக மனுவை எதிர்த்து சசிகலா பதில் மனு தாக்கல் !

 


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கும்படி சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



சூடுபிடிக்கும் அதிமுக விவகாரம்: பொதுக்குழு வழக்கில் அதிமுக மனுவை எதிர்த்து சசிகலா பதில் மனு தாக்கல் !


அந்த பதில் மனுவில்,"உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி  கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்களில் மட்டும் தான் தேர்தல் ஆணையம் தலையிட முடியும். மேலும் தேர்தல் ஆணையம் தான் தொடர்ந்து உள்ள உரிமையியல் நீதிமன்ற வழக்கை சுட்டு காட்டியுள்ளது. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது" எனக் கூறப்பட்டுள்ளது. 


மேலும் இந்த விவகாரத்தில் அதிமுக கட்சியின் நிதி தொடர்பான விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் அக்கட்சி கணக்கு உள்ள நான்கு வங்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நான்கு வங்கிகளும் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையையும் வரும் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


முன்னதாக இந்த வழக்கில் அமமுகவின்  டிடிவி தினகரன் ஒரு மனுதாரராக இருந்தார். அதன்பின்னர் அவர் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். இந்த விவகாரத்தையும் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சுட்டுக்காட்டப்பட்டிருந்தது. மேலும் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை அவர்களுக்கு தான் சொந்தம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் சுட்டி காட்டியுள்ளனர். இந்தச் சூழலில் தற்போது சசிகலா தரப்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது உள்ள ஊழல் புகார்கள் மற்றும் கோடநாடு விவகாரம் ஆகியவை பெரிதாக வெடித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சசிகலா வழக்கும் வந்திருப்பது அதிமுகவிற்கு மற்றொரு பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த வழக்கும் முக்கியத்துவம் வாயந்த வழக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது. 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!