மோசடி புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்…கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பெண்: இணையத்தில் வைரலானதால் பரபரப்பு..!!
சென்னை: புகாரை வாங்க மறுப்பதாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் தனது குழந்தையுடன் அழுத படி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா. வடமாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், ஓட்டேரி காவல் நிலைய வாசலில் தனது குழந்தையுடன் அழுதபடி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் , நான் ஒருவரிடம் எனது காரை விற்றேன். காருக்கான மாத தவணையை வங்கியில் கட்டுவதாக கூறிய அவர், கட்டாமல் இருந்ததால் வங்கியில் இருந்து என்னிடம் கேட்டனர். இதனால் காரை திரும்ப கேட்டோம். இதுபற்றி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இதையறிந்த எதிர்தரப்பை சேர்ந்த 4 பேர், போலீஸ் நிலைய வாசலிலேயே என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர்.
இதுபற்றி ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் புகாரை வாங்க மறுத்து விட்டார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கைக்குழந்தையுடன் அழுதபடி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.
இதையடுத்து ஓட்டேரி சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணிடம் புகாரை பெற்று அவரை மிரட்டியதாக கூறிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.