வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சரண்…7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு!!
சிவகாசி: மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் சரணடைந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ம் தேதி மஜக நிர்வாகி வசீம் அக்ரம் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன்னுடைய ஏழு வயது மகனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கொலைக்கும்பல் வசீம் அக்ரமை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாணியம்பாடி நகரம் முழுவதும் இந்தக் கொலையால் பரபரப்பானது. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் தப்பிச்சென்ற கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடத் துவங்கினர். இந்நிலையில், கொலை நடந்த அன்று இரவு தமிழ்நாடு முழுவதும் அலார்ட் செய்யப்பட்டது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகில் போலீசார் வாகன சோதனையில் குற்றவாளிகள் சென்ற கார் சிக்கியது.
காரில் இருந்தவர்களில் சிலர் தப்பிச் சென்றனர். வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், வண்டலூர் பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஒரு கார், காருக்குள் இருந்து 11 பட்டாகத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் என்பவரின் கிடங்கில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு வசீம் அக்ரம் ரகசிய தகவல் கொடுத்ததால், கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள், 10 செல்ஃபோன்களைப் பறிமுதல் செய்தனர்.
அந்த வழக்கில் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக டீல் இம்தியாஸ் கேட்டுக்கொண்டதால், 8 பேர் வந்து கூலிக்காக கொலை செய்தோம் என வாக்குமூலம் தந்தனர். அவர்கள் சொன்ன தகவலின்படி மறைவாக உள்ள கொலைக் குற்றவாளிகளைப் போலீசார் தேடிவந்தனர். கஞ்சா வழக்கை சரியாக விசாரிக்கவில்லையென வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வத்துக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் தஞ்சாவூர் ஜே.எம். நீதிமன்றத்தில் பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் ஜே.எம். 3, நீதிபதி பாரதி முன்பு வழக்கறிஞர் வீரசேகருடன் சென்று சரணடைந்துள்ளனர். இதில் செல்வகுமார், கஞ்சா பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இதனையடுத்து, இன்று மாலை முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிவகாசி நீதிமன்றத்தில் டீல் இம்தியாஸ் சரணடைந்ததை அடுத்து 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.