வாரியத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை: 6.5 கிலோ தங்கம் சிக்கியது
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் மீது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சோதனையில் ரூ.13.5 லட்சம் பணம், சுமார் 6.5 கிலோ தங்கம் (தோராயமாக சுமார் 2.50 கோடி மதிப்பு) மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. வழக்கிற்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலத்தின் வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், கண்டறியப்பட்டு, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.