பறக்கும் படையினர் சோதனை: ரூ.57,000 பணம், 6.16 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பணமும், 6 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில், மூங்கில் துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், சங்கராபுரம் நகரத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி செல்வராஜ் என்பவரின் மகன் சரவணன் ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த கணக்கில் வராத ரொக்கப் பணமும், 1 கிலோ 804 கிராம் புதிய வெள்ளி நகைகள் மற்றும் 4 கிலோ 355 கிராம் பழைய வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.