பட்டா பெயர் மாற்ற ரூ.4 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய விஏஓ!!

 
திண்டுக்கல் : நத்தம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் வி.ஏ.ஒவாக பணியாற்றுபவர் தங்கவேல் (வயது 52). இவரிடம் வத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னழகன் என்பவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு அனுமதி வழங்க, வி.ஏ.ஓ. தங்கவேல் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சின்னழகன் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் அவர்களின் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, வி.ஏ.ஓ., தங்கவேலுவிடம் நேற்று, சின்னழகன் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் வி.ஏ.ஓ.,வை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.