31 சவரன் நகைகளை தவறவிட்ட பெண்… போலீஸாரின் சாமர்த்தியத்தால் ஒருமணிநேரத்தில் நிகழ்ந்த அதிசயம்!!
நாகை : மயிலாடுதுறையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகளை ஒருமணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் அப்துல்குத்தூஸ் மனைவி மெகராஜ்கனி (46). இவரது மகள் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு கணவருடன் சொந்த ஊரான நீடூருக்கு திரும்பியுள்ளார். மகளை பார்ப்பதற்காகவும், அவரிடம் நகைகளை கொடுப்பதற்காகவும் ஆயப்பாடியிலிருந்து மயிலாடுதுறைக்கு மெகராஜ்கனி பஸ்ஸில் வந்துள்ளார்.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்திறங்கிய மெகராஜ்கனி கச்சேரி சாலையில் உள்ள பிரபல பேக்கரி கடை ஒன்றில் இனிப்புகள் வாங்கியுள்ளார். பின்னர் மெகராஜ்கனி ஆட்டோவில் நீடூருக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் நகைகள் வைத்திருந்த பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் மெகராஜ்கனி புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் ஆட்டோ டிரைவர் மற்றும் பேக்கரி கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் காணாமல் போன நகைகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
பின்னர், மயிலாடுதுறை நகரில் அமைக்கப்பட்டுள்ள 81 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் சில முக்கிய கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பேக்கரி கடையில் மெகராஜ்கனி நகையை வைத்துவிட்டு வெளியே வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேக்கரி கடையில் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேக்கரி கடையில் இருந்த ஊழியர்கள் மெகராஜ்கனி விட்டுச்சென்ற நகையை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த பையில் என்ன இருந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்று பேக்கரி கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 3 நெக்லஸ்கள், 3 ஜோடி வளையல்கள் உட்பட 31 பவுன் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மெகராஜ்கனியிடம் ஒப்படைத்தார். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சிறப்பாக ஆய்வுசெய்து, தவறவிட்டு சென்ற நகையை ஒரு மணிநேரத்தில் மீட்டு சிறப்பாக பணியாற்றியதற்காக தலைமை காவலர் செந்தில்குமார், காவலர் சுகுணா ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) தங்கவேலு, காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.