30 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் | காரணம் என்ன தெரியுமா?

 


45 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்ற இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைக்கு இணங்கி வாட்ஸ்அப் வெளியிட்ட இணக்க அறிக்கையின் தகவலின்படி, ஜூன் 16 மற்றும் ஜூலை 31 க்கு இடைப்பட்ட 45 நாட்களில் 30,27,000 இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைகள் இந்த ஆண்டு மே 26 அன்று நடைமுறைக்கு வந்தன. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கும் சமூக ஊடகங்கள் அனைத்தும் மாதாந்திர இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில் தளத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வாட்ஸ்அப் தனது தளம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிப்பதால், அதனால் அதை படிக்க முடியாது. ஆனால், பயனர்களின் புகார்கள், செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்வற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது.

வாட்ஸ்அப் தாக்கல் செய்த அறிக்கையின்படி, வாட்ஸ்அப் வாடிக்கையாளர் ஆதரவு (137), தடை முறையீடு (316), பிற வகையான ஆதரவு (45), தயாரிப்பு ஆதரவு (64) மற்றும் பாதுகாப்பு (32) ஆகியவற்றுக்கென 594 குறைகள் அறிக்கைகளை ஜூன் 16 மற்றும் ஜூலை 31 தேதிக்குட்பட்ட காலத்தில் பெற்றுள்ளது.  இந்த குறைகள் அறிக்கைகளின் அடிப்படையில், வாட்ஸ்அப் 74 கணக்குகளின் மீது “நடவடிக்கை” எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

தடைச்செய்யப்பட்ட 30+ லட்சம் இந்திய கணக்குகளில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை அங்கீகரிக்கப்படாத தானியங்கி அல்லது பல்க் மெசேஜிங் செய்த காரணங்களுக்காக தடைச் செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ்அப் தளத்தில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் சராசரியாக உலகம் முழுவதும் 80 லட்சம் கணக்குகளைத் தடை செய்வதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.