நீட்’ மாணவர் தூக்கிட்டு தற்கொலை: 2 ஆண்டுகள் இடைவிடாத பயிற்சி…இன்று தேர்வு...சேலம் மாணவரின் விபரீத முடிவு!!
சேலம்: மேட்டூர் அருகே இன்று நீட் தேர்வு எழுதவிருந்த 19 வயது தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பெரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இன்று 11:30 முதல் 1:30 மணிக்குள் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்தின் உள்ளே சென்றுவிட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு எழுதும் மையங்களை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தைரியம் அளித்து வருகின்றனர் என்பதும் அச்சப்படாமல் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டு வரும் துயர சம்பவங்கள் முற்றுபெறாமல் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இன்றும் நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவன் நீட் அச்சம் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவரின் பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற விவசாயியின் மகன் தனுஷ். இவர் இரண்டு முறை ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாகவும் இந்த முறையும் தோல்வி அடைந்தால் மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனுஷ் தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை என்ற தகவல் அந்த பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் நீட் தேர்வை அனைவரும் தைரியமாக எழுத வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.