மதுரை சட்டையை கழட்டிட்டு வாண்ணே...போலீஸ்காரரை சண்டைக்கு அழைத்த ரவுடி மீது 2 வழக்கு
மதுரை நகர் தனிப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில், இவரை சண்டைக்கு அழைத்ததாக பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேசை போலீசார் தேடிவந்த நிலையில் தற்போது அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது. இதில் போலீசார் ஒருவரை மற்றொருவர் சண்டைக்கு அழைப்பது பதிவாகியிருந்தது. இது குறித்து விசாரிக்கையில் மதுரை நகர் தனிப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில், இவரை பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் காக்கி சட்டையை கழட்டிட்டு சண்டைக்கு வாண்ணே என அழைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
என் கை, கால்களை உடைக்க வேண்டும் என சொன்னயாமே. நீ எங்கே இருக்கேனு சொல்லு. நான் வாரேன். நீ காக்கி சட்டயை கழட்டி வச்சுட்டு ஆம்பளையா வாண்ணே. சண்டை போடுவோம். நான் வீரன். இன்னும் மூன்று நாளில் பீபிகுளத்தில ஒருவனை கொன்னுடுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என செல் போனில் ரவுடி ராஜேஷ் பேசிய அடாவடியான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது..
ரவுடியை ஏட்டு செந்தில்குமார் கண்டித்ததும், 'சரிண்ணே, மன்னிச்சுடு. என்னை சுட்டுக்கொல்லுங்க.... உயிரையே வெறுத்துவிட்டேன்' என்று டக்கென்று மிரட்டலில் இருந்து யூடர்ன் அடித்து மன்னிப்புக் கேட்டு மன்றாடிய ராஜேஷின் கதறல் ஆடியோவும் வெளியானது...
இந்த மிரட்டல் ஆடியோ தொடர்பாக ஏட்டு செந்திலிடம் விசாரித்த உயர் அதிகாரிகள் , அவனை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ரவுடியை காவல்துறை தேடி வந்தது. ஆனால் ரவுடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தற்போது ரவுடி ராஜேஷ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராஜேஷ் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை மற்றும் போக்சோ என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரியவந்துள்ளது.