புதுச்சேரியில் பெண்ணிடம் பேஸ்புக்கில் பழகி 13.65 லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி, ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மனோகரன். டைல்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெயந்தி (42). இவருக்கு முகநூல் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த எரிக் வால்க்கர் என்பவர் அறிமுகமானார். டாக்டர் என்று தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார்.
அதன் பின் இருவரும் செல்போன் எண்களை கொடுத்து நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் ஜெயந்தியின் 2 ஆவது மகளுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இது குறித்து தெரிய வந்ததும் மகளுக்கு விலையுயர்ந்த பரிசு பொருள் அனுப்புவதாக ஜெயந்தியிடம் எரிக் வால்க்கர் கூறினார். அந்த பரிசு பொருளை செல் போனில் படம் பிடித்து ஜெயந்திக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி ஜெயந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர், உங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து பரிசுப் பொருள் வந்துள்ளது. அந்த பரிசை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனை உண்மை என்று நம்பிய ஜெயந்தி தனது வங்கி கணக்கில் இருந்து பல தவணையாக 13.65 லட்சம் செலுத்தி உள்ளார்.
ஆனால் அவருக்கு அந்த பரிசுப் பொருள் தான் வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை. மேலும் ஆண் நண்பர் எரிக் வால்க்கரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி, இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ச்சியாக இது போன்று வலைதளங்களில் மூழ்கி தெரியாதவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் வலைதளங்களை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் இது போன்ற மோசடிகள் செய்யப்படுவதாக உணரப்பட்டால் உடனடியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்குமாறு சைபர் கிரைம் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.