திருப்பதியில் 100 ஒரு ரூபாய் நாணயங்கள் கொண்ட பிரசாதம் : சில்லறைகளை வாங்க வங்கிகள் தயங்குவதால் புதிய யுக்தி!!

 


ஏழுமலையான் பக்தர்களுக்கு நூறு ஒரு ரூபாய் நாணயங்கள் கொண்ட தன பிரசாத பாக்கெட்டுகள் திருப்பதி மலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தன பிரசாதம் என்ற பெயரில் 100 ஒரு ரூபாய் நாணயங்களை கொண்ட சில்லறை நாணய பாக்கெட் மற்றும் மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை தன பிரசாதம் என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யும் புதிய நடைமுறையை தேவஸ்தானம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் சமர்ப்பிக்கப்படும் சில்லறை நாணயங்கள் இதற்கு முன் வங்கிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் வங்கிகள் சில்லறை நாணயங்களை தேவஸ்தானத்திடம் இருந்து வாங்கி கொள்ள தயக்கம் காட்டுகின்றன.

இதனால் ஏழுமலையான் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை கணக்கிடும் பகுதியில் சில்லரை நாணயங்கள் குவிய துவங்கிவிட்டன. எனவே அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது 100 ஒரு ரூபாய் நாணயங்கள் கொண்ட பாக்கெட் ஒன்றை தன பிரசாதம் என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்யும் நடைமுறையை திருப்பதி மலையில் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அதனுடன் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன. திருப்பதி மலையில் உள்ள துணை விசாரணை காரியாலயங்களில் அவற்றை பக்தர்கள் வாங்கி கொள்ளலாம்.

ஏழுமலையான் கோவில் உண்டியலில் சமர்ப்பிக்கப்பட்ட நாணயங்கள் ஆகையால் தேவஸ்தானத்தின் தன பிரசாத பொட்டலங்களை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.