கலைஞர் உருவப்படம் திறப்பு - கலைஞர் மகனாக நெகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 


கலைஞர் படத்தை ஜனாதிபதி திறந்ததை நினைத்து முதலமைச்சராக மகிழ்கிறேன் என்றும், கலைஞர் மகனாக நெகிழ்கிறேன் எனவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் திருவுருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு கீழே ’’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’’ என்ற கருணாநிதி எழுதிய பொன்மொழி இடம்பெற்றுள்ளது. பேரவையில் 16ஆவது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக 5 முறையும், சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர் கருணாநிதி. 

இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்திருத்த திட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கருணாநிதி. கலைஞர் படத்தை ஜனாதிபதி திறந்ததை நினைத்து முதலமைச்சராக மகிழ்கிறேன். கலைஞர் மகனாக நெகிழ்கிறேன். முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், எம்எல்ஏ என பதவிகளை வகித்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உண்டு” என்று பேசினார்.

 முன்னதாக, இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கே.ராஜன் எழுதிய ‘பண்டைய எழுத்து முறை’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

இந்த விழாவில் வரவேற்புரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, ”1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்றைய சென்னை மாகாண சட்டமன்ற அவையில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த அடிப்படையில் இந்த பேரவை தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி” என்றார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்