திருமாவளவன் பங்கேற்ற கட்சி கூட்டத்தில் கத்தியுடன் வந்த மர்மநபர் : தொண்டர்கள் ஷாக்.. போலீசார் விசாரணை!!!நேற்றைய முன் தினம் விசிக தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் மதுரை அருகே தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று தலைமை தாங்கினார். அப்போது கருத்தரங்க கூட்டத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கத்தியுடன் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த விசிக தொண்டர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அந்த மர்மநபரை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் யார் எதற்காக கத்தியுடன் வந்தார், யாராவது அனுப்பி இங்கு வந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் சோழவந்தானை சேர்ந்த மாரீஸ்வரன் (வயது 28) என்பதும், அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசிக கூட்டத்தில் இளைஞர் கத்தியுடன் நுழைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.