திண்டுக்கல்:பைக் மீது மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட சிறுமி : மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி!!

  


காக்காதோப்பு பிரிவில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்த நிலையில் விபத்தில் சிறுமி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி மனதை ரணமாக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி இருசக்கர வாகனம் வந்த கொண்டிருந்தது.

இருசக்கர வாகனத்தை வாணிக்கரையை சேர்ந்த மாயக்கண்ணன் (வயது 37) மற்றும் அவரது அண்ணன் மகளான பதினேழு வயது சிறுமி இருவரும் திண்டுக்கல்லில் ஆதார் கார்டை பெயர் மாற்றம் செய்வதற்காக சென்றுவிட்டு மீண்டும் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் நோக்கி திரும்பினர்.

அப்போது சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் மாயக்கண்ணனும், பின்னால் அமர்ந்திருந்த சிறுமியும் தூக்கி வீசப்பட்டார். அவர்கள் மற்றொரு புறம் சாலையை கடக்க காத்திருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விழுந்தனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மனதை ரணமாக்கியுள்ளது. 17வயது சிறுமிக்கு இரண்டு கால் எலும்புகளும் முறிந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.