பாலியல் வன்கொடுமை - ஹெச்.ராஜாவின் தீவிர ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டம் பாஜக நகர இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளவர் பாரத் லால் என்கிற லால்சரண். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தீவிர ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் பாரத் லால் மீது யூடியூப் சேனலில் நடிக்க வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த உதவி வழக்கறிஞராக பணியாற்றும் நான்காம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி காவல்துறையில் அளித்துள்ள புகாரில் ’’என் தந்தை கூலி வேலை செய்துவரும் நிலையில், நான் 4ஆம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறேன். வழக்கறிஞர் பணி நிமித்தமாக சிவகங்கை காமராஜர் காலனியில் உள்ள பாஜக நிர்வாகி பாரத் லாலின் போட்டோ ஸ்டுடியோவிற்கு போட்டோ எடுக்க சென்றபோது, அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது பாரத் லால் கொடுத்த பழச்சாறை குடித்த போது மயக்கம் ஏற்பட்டது. மயக்கத்தில் இருந்த என்னை பலவந்தமாக கட்டாயப்படுத்தி பாரத் லால் உடலுறவு கொண்டார். மயக்கம் தெளிந்த நிலையில் எழுந்து பார்க்கும் போது என் உடலில் துணிகள் ஏதும் இல்லை. இது குறித்து பாரத் லாலிடம் கேட்ட போது உன்னை ஆடையின்றி போட்டோ எடுத்துள்ளேன் என மிரட்டியதாக அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனால் பாரத் லால்வுடன் உடன் இருந்த நட்பை துண்டித்துக் கொண்டேன். இந்நிலையில் சில நாட்கள் கழித்து நான் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பி இதை இணையதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் கர்ப்பம் அடைந்ததாகவும், இது குறித்து பாரத் லாலிடம் கேட்ட போது எனக்கும் எனது தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே வேறு வழியில்லாம் தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி போலீசுக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மாணவி அளித்துள்ள பாலியல் புகார் குறித்து காவல் துறையினரிடம் கேட்ட போது, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக நகர இளைஞரணி பொதுச்செயலாளர் பாரத் லால் என்கிற லால்சரண் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரத் லாலிடம் விசாரணை மேற்கொண்டதற்கு பிறகுதான் முழு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பாரத் லால் சிவகங்கை திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தலைமறைவாக இருப்பதாக இருக்கும் நிலையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.