‘அன்னை தமிழில் அர்ச்சனை’ - பதாகையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

 


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை  இன்று வெளியிட்டார். அந்தப் பதாகையில், குருக்களின் பெயர்களும் அலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் உள்ளனர்.


இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருக்கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.