சிங்கம் சூர்யாவாக மாறிய கணவன் : பிரபலங்களையே ஏமாற்றி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பலே கில்லாடி கைது!!
மனைவியை நம்ப வைக்க போலீஸ் கமிஷனராக வேடம் போட்ட கணவன், பல்வேறு பிரபலங்களுடன் புகைப்படத்தை எடுத்து தான் ஒரு கமிஷ்னராகவே நம்ப வைத்து, பதவியை மாறி மாறி கூறி சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளார்.
போலீஸ் உடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனைக்கு தேனி மாவட்டம் வழியாக ஜீப்பில் புறப்பட்டார். தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடியில் போலீசார் அவரை தடுத்தனர்.
அப்போது, அவர், தான் தமிழகத்தில் போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிவதாகவும், வழக்கு விசாரணை தொடர்பாக செல்வதாகவும் கூறி கேரளாவுக்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்து கட்டப்பனைக்கு ஜீப்பில் சென்ற அவர், போலீஸ் துணை சூப்பிரண்டு நிஷாந்த் என்பவரை சந்தித்தார்.
தனது அடையாள அட்டையை அவர் காண்பித்து, தன்னை உதவி போலீஸ் கமிஷனர் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு விஜயன், அங்கிருந்து தமிழகத்துக்கு ஜீப்பில் புறப்பட தயாரானார். அதற்கு முன்னதாக, கட்டப்பனை போலீஸ் நிலையத்தை அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
விஜயனின் இந்த நடவடிக்கைகளை கவனித்த கட்டப்பனை போலீசார், அவர் மீது சந்தேகம் அடைந்தனர். இதனால் விஜயனுக்கு தெரியாமல் அவரையும், அவர் வந்த காரையும் கட்டப்பனை போலீசார் புகைப்படம் எடுத்தனர். மேலும் அவருடைய அடையாள அட்டையில் இருந்த எண்ணையும் குறித்து கொண்டனர்.
இதனையடுத்து விஜயனின் புகைப்படம், ஜீப் எண், அடையாள அட்டை எண் ஆகியவற்றை தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி கேரள போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது, விஜயன் தமிழக போலீஸ் துறையில் பணிபுரியவில்லை என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து விஜயன், போலி போலீஸ் அதிகாரி என்று தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க கட்டப்பனை போலீசார் விரைந்தனர்.
கட்டப்பனையில் இருந்து தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு வரை சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் விஜயன் ஜீப்பில் தப்பி, தேனி மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டார். இதைத்தொடர்ந்து தமிழக போலீசாருக்கு, கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் தான் பட்டிவீரன்பட்டி அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் விஜயன் சிக்கியுள்ளார்.
தொழிலில் நஷ்டமடைந்த விஜயன், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை ஏமாற்ற குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் உதவி ஆணையராகிவிட்டதாகக் கூறியுள்ளார்.
நண்பர் ஒருவர் உதவியுடன் கார் ஒன்றை வாங்கி அதை போலீஸ் வாகனம் போல் மாற்றியுள்ளார். உதவி ஆணையர் சீருடையில் காரை ஓட்டிச்சென்று மனைவியிடம் காண்பித்து நம்ப வைத்துள்ளார்.
அதன் பின், பணிக்குச் செல்வதாகக் கூறி காரை எடுத்துக்கொண்டு கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராணுவ வீரர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளை உள்ளிட்டோரை சந்தித்து புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பரப்பியுள்ளார்.
தனது மனைவியை ஏமாற்ற தொடங்கிய இந்நாடகத்தை பின்னர் நிரந்தரமாகவே மாற்றிவிட்டார். சில காலங்களில் உண்மையான உதவி ஆணையராக மாறிவிட்ட விஜயன் தன் செல்லும் பாதையில் போலீசாரிடம் விசாரணை, ஆவணங்களைச் சரிபார்ப்பது வனப்பகுதிகளுக்கு செல்வது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சோதனைச் சாவடிகளில் சந்தேகப்பட்டு இவரை விசாரிக்கும் போலிஸாரிடம், இந்த படங்களை காட்டி நம்பவைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய போலீஸார், அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக எங்கும் சிக்காமல் வலம் வந்துள்ளார். சமீபத்தில் தேனியிலும், திண்டுக்கல்லிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் தனது பதவி குறித்து முன்னுக்குப் பின் மழுப்பலாக பதில் கூறிய நிலையில் பட்டிவீரன்பட்டி காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மேலும் விஜயனை கைது செய்துள்ள போலீசார் போலி போலீஸ் கமிஷனராக பண மோசடி உள்ளிட்ட வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியில் விஜயன் சிக்கிய நிலையில் ஐபிசி சட்டப்பிரிவு 420-இன் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வேலை செய்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விஜயன் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஒரிஜனல் போலீசை விஞ்சும் அளவிற்கு டுபாக்கூர் போலீஸ் விஜயன் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணை முடிவுக்கு பின்பு தான் விஜயனின் முழு அலப்பறைகள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.