கள்ளச்சாவிகளைப் போட்டு நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தை திறந்து சோதனை நடத்துவதா..? தமிழக அரசுக்கு அதிமுக கண்டனம்..!!

 


சென்னை : பணியாளர்கள் இல்லாத நேரத்தில் நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் அலுவலகத்தின் பூட்டுகளை போலி சாவி போட்டும், உடைத்தும் திறந்தது சட்டப்படி குற்றம் என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஜனநாயகத்தின்‌ நான்காம்‌ தூண்‌ பத்திரிகை என்பார்கள்‌. அந்த பத்திரிகை சுதந்திரத்தைக்‌ காப்போம்‌ என்று கூறிக்கொள்ளும்‌ ஸ்டாலின்‌ தலைமையிலான திமுக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை மட்டுமல்ல, பத்திரிகை நடத்துவோரின்‌ உரிமையையும்‌ காலில்போட்டு மிதித்திருக்கிறது.

நேற்று (10.08.2027), காவல்‌ துறையை தன்‌ பொறுப்பில்‌ வைத்திருக்கும்‌ திரு. ஸ்டாலின்‌ அவர்கள்‌, சோதனை என்ற பெயரில்‌ சென்னை, அழ்வார்பேட்டை அசோக்‌ சாலையில்‌ இயங்கி வரும்‌ கழக நாளேடான “நமது புரட்சித்‌ தலைவி அம்மா” நாளிதழ்‌ அலுவலகத்தில்‌ பணியாளர்கள்‌ யாரும்‌ இல்லாத நேரத்தில்‌, காவல்‌ துறையை ஏவி, சட்டத்தை மீறி பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்து, சோதனை என்ற பெயரில்‌ அராஜகத்தையும்‌, அடாவடியையும்‌ அரங்கேற்றி உள்ளனர்‌.

சோதனைக்கு வந்த காவலர்கள்‌ சட்டத்திற்கு விரோதமாக, பணிக்கு வந்த பத்திரிகை ஆசிரியர்களையும்‌, அலுவலர்களையும்‌ இரவு வரை நமது அம்மா நாளிதழ்‌ அலுவலகத்திற்குள்ளே அனுமதிக்காமல்‌ தடுத்துள்ளனர்‌. பொதுவாக, ஏதேனும்‌ ஒரிடத்தில்‌ காவலர்கள்‌ சோதனைக்குச்‌ செல்லும்பொழுது, சம்பந்தப்பட்ட உரிமையாளர்‌ முன்னிலையிலோ அல்லது அந்த இடத்தில்‌ உள்ள பொறுப்பாளர்கள்‌ முன்னிலையிலோ தான்‌ சோதனை நடத்தப்பட வேண்டும்‌ என்பது சட்டம்‌.
ஆனால்‌, காவலர்கள்‌ சட்டத்திற்குப்‌ புறம்பாக, விவரம்‌ அறிந்து வந்த நமது அம்மா நாளிதழ்‌ ஆசிரியர்‌ மற்றும்‌ பத்திரிகை அலுவலகத்தில்‌ பணிபுரியும்‌ பொறுப்பான அலுவலர்கள்‌ யாரையும்‌ அனுமதிக்காமல்‌, சட்டத்திற்குப்‌ புறம்பாக சோதனை மேற்கொண்டுள்ளனர்‌. சோதனை என்ற பெயரில்‌ அனைத்துப்‌ பூட்டுகளையும்‌ போலி சாவி போட்டும்‌, உடைத்தும்‌ சோதனை நடத்தி உள்ளனர்‌. இது, சட்டப்படி தண்டிக்கப்படக்‌ கூடிய குற்றமாகும்‌.

வேலியே பயிரை மேய்வது போல்‌, காவல்‌ துறையினர்‌ எந்தவித முன்‌ அனுமதியும்‌ இன்றி சட்டத்தை மீறி, ஒரு பத்திரிகை அலுவலகத்தில்‌ அத்துமீறி நுழைந்துள்ளது மாபெரும்‌ கிரிமினல்‌ குற்றமாகும்‌. இதுபோன்ற செயலில்‌ ஈடுபட்டவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ தண்டிக்கப்பட வேண்டியவர்கள்‌. அவர்கள்‌ மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று எச்சரிக்கிறோம்‌. பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்‌ வகையில்‌, சட்டத்திற்குப்‌ புறம்பாக “நமது புரட்சித்‌ தலைவி அம்மா” நாளிதழ்‌ மீது நடைபெற்ற இந்தத்‌ தாக்குதலுக்கு, காவல்‌ துறையை தன்‌ பொறுப்பில்‌ வைத்திருக்கும்‌ திரு. ஸ்டாலின்‌ அவர்களே பொறுப்பேற்க வேண்டும்‌.

தவறு செய்த காவல்‌ துறையைச்‌ சேர்ந்தவர்கள்‌ மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பாக கேட்டுக்‌ கொள்கிறோம்‌. வரும்‌ காலங்களில்‌ பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்‌ ஏற்படும்‌ இதுபோன்ற செயல்களில்‌ இந்த அரசு ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்‌ கொள்வதோடு, இச்சம்பவத்தை கடுமையாகக்‌ கண்டிக்கின்றோம்‌, என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)