நீளும் நெட்வொர்க் தகவல், குண்டாஸ் போட கோரிக்கை.. இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்கில் திடுக்கிடும் புது ட்விஸ்ட்..
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷர்த். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர்கள் அர்ஷர்த் வைத்திருந்த 10 லட்சம் பணத்தை அச்சுறுத்தி, பிடுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜூலை 27-ஆம் தேதி கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் சுதந்திராதேவி ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியை சேர்த்த பால்பாண்டி, மதுரை சிலைமானைச் சேர்ந்த உக்கிரபாண்டி, விருதுநகர் திருத்தங்களை சேர்ந்த கார்த்திக் என்ற சீமைச்சாமி, ஆகிய மூவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 2,26,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மூளையாக இருந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாகினர்.
இதனிடையே பெண் ஆய்வாளர் வசந்தியின் சார்பில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்து மனு மீதான விசாரணையின் போது உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு நீதிமன்றம் அறவுறுத்தியிருந்தது. இதையடுத்து ஆய்வாளர் வசந்தியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தேடிவந்தனர். அவரது செல்போன் நம்பரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது வசந்தி அவரது சகோதரர் குண்டு பாண்டியராஜ் ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் கோத்தகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு விடுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து மதுரை அழைத்துவந்தனர். பின்னர் இன்று காலை மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர் இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வசந்தி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணை உள்ளதால் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கண்ணன் என்ற வழக்கறிஞர் குறுக்கீட்டு மனு அளித்தார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் ஆய்வாளர் வசந்தி மற்றும் அவரது சகோதரர் பாண்டியராஜ் ஆகிய இருவருக்கும் 9.9.2021 அன்று தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அனுராதா உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
மேலும் இது குறித்து மூத்த வழக்கறிஞர் ப.ஸ்டாலின் நம்மிடம்," இன்ஸ்பெக்டர் வசந்தி பெரிய நெட் ஒர்க் வைத்து செயல்பட்டவர். தற்போதுதான் 10 லட்சம் அபகரித்த வழக்கில் சிக்கி உள்ளார். இவருக்கு கீழ் பல்வேறு காவலர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்து வந்தனர். பணத்தை இரட்டிப்பாக்கும் குற்றங்களில் இவர் ஈடுபட்டதாக பல்வேறு புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த புகாரும் உள்ளது. அதே போல் கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் லாக்கப் டெத் ஒன்றை நிகழ்ச்சியுள்ளார். மேல் அதிகாரிளாக உள்ள சில கருப்பு ஆடுகள் உதவி வருகின்றர். எனவே டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறையில் உள்ள தவறான நெட் ஒர்க்கை உடைக்க வேண்டும். சாதி அடிப்படையில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மீது விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வசந்தி மீது குண்டாஸ் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். வசந்தியுடன் தொடர்பில் இருந்த காவல்துறையினரையும் விசாரணை வலையத்தில் கொண்டுவர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.