வாட்ஸ்-அப் மூலம் நிமிடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எடுத்துக்கலாம்.. எப்படி?
ஒரு நபருக்கு முதலாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்ட பிறகு, கோவின் தளம் தானாகவே டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை உருவாக்கும்
கொரோனா தடுப்பூசி சான்றிதழை MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் எளிய முறையில் பெறலாம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற "Covid Certificate" என டைப் செய்து +91 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்ப வேண்டும்; அதன் பிறகு நமக்கு வரும் OTP எண் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
தற்போதுவரை இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு முதலாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்ட பிறகு, கோவின் தளம் தானாகவே டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை உருவாக்கும். இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான நினைவூட்டலுக்கு இந்த சான்றிதழ் பயன்படும். அதன் பிறகு இறுதிச் சான்றிதழ் அளிக்கப்படும்.
ஸ்புட்னிக் தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக போடப்படுகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக உள்ளன. 28 நாட்களுக்குப் பிறகு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போடப்படுகிறது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 52.37 கோடிக்கும் அதிகமான (52,37,50,890) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 8,99,260 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இவற்றில், இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 50,32,77,942 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்தை பெற கோவின் (cowin.gov.in) இணையதளத்திலோ, ஆரோக்கிய சேது செயலி வாயிலாகவோ, நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். 1.37 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில், 500 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்தனை தகவல்களும் உடனுக்குடன், மாவட்ட வாரியாக கோவின் தளத்தில் பதிவேற்றப்பட்டு அனைவரின் பார்வைக்கும் கிடைக்கிறது.
முன்னதாக, வீடு இல்லாத ஆதரவற்ற மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது . அதன்கீழ், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல, தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல, கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்யவேண்டிய அவசியமும் இல்லை. இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு, பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட அன்றே குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்.