புதுச்சேரியின் நிதியாதாரம் குறைந்துள்ளது-துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு

 


புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரானது வரலாற்றில் முதன் முறையாக ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசையை சட்டப்பேரவை தலைவர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கும், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கடினமாகப் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை தேர்தலை சுதந்திரமான, நியாயமான முறையில் நடத்தப்பட்டது மகிழ்ச்சி. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மீண்டும் நம்பிக்கை வைத்துத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கு முன்னர் அவரது தலைமையின் கீழ் இயங்கிய அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தது நிரூபணமாகியுள்ளது.

புதிய அரசானது வளர்ச்சி, வளம் மற்றும் மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்கப் பாடுபடும் என்று நம்புகிறேன். கொரோன பரவலைத் துரிதமாக அரசு கட்டுப்படுத்தியுள்ளது. உடனடியாக அனைவரும் தடுப்பூசி செலுத்தவேண்டும்.2020-21ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கான 9 ஆயிரம் கோடியில் 8,419 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வருவாய் இலக்கில் 94 சதவீதம். 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடான 9 ஆயிரம் கோடியில் 8,342 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 93 சதவீதம். கொரோனா தொற்றுப் பரவல் சூழலிலும் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.

புதுச்சேரி நிதி ஆதாரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. குறிப்பாக சரக்குகள் மற்றும் சேவை வரி  அறிமுகப்படுத்திய பிறகு இவை ஒரு சவாலாகவே உள்ளன. தவிர்க்க முடியாத செலவினங்களை கிடைக்கும் வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்துகொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது. மக்களின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வருவாயைப் பெருக்கி அவற்றுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி ஒரு சிறந்த பட்ஜெட்டை முதல்வர் சமர்ப்பிப்பார் என்று நம்புகிறேன்

புதுச்சேரியில் தேவையான அளவு மின்சாரம் உள்ளதால் தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் தரப்படுகிறது. மின்பகிர்மான கட்டமைப்பை மேம்படுத்த 58.27 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கோவிட் மருத்துவமனையானதால் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து 235 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் கட்டுப்பாட்டில் வராத 42 திருக்கோயில்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 2.61 கோடி கொடையாக தரப்பட்டுள்ளது

புதுச்சேரியிலுள்ள 55 அரசு துறைகளில் இதுவரையில் 24 துறைகளின் வலைத்தளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 31 துறைகளுக்கு வலைத்தளங்கள் சீரமைக்கப்படும். புதுச்சேரி முழுக்க குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட உள்ளன. காவல்துறையைப் பலப்படுத்த புதிய காவலர்களைத் தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு புதிய வளாகம் ஒன்றை நிறுவ காரைக்காலில் 25 ஏக்கர் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடரை இன்று தொடங்கி வைத்து தமிழில் ஆளுநர் தமிழிசை உரையாற்றினார். அரசு, அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதர கட்டணங்களான நூலகக் கட்டணம், விளையாட்டு நாள் கட்டணம், பருவ இதழ் கட்டணம், கல்லூரி நாள் கட்டணம், ஆய்வக கட்டணம் ஏழை மாணவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். முதல்வர் வழிகாட்டுதலின்படி மக்களின் எதிர்பார்ப்புகளை மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்ற கடுமையாக பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். எதிர்வரும் காலங்களில் வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத வளமை மிக்க பிரதேசமாக புதுச்சேரியை உருவாக்குவீர்கள். புதுச்சேரி விரைவில் கொரோனா பரவலில் இருந்து விடுபடும் என்று நம்புகிறேன் என  ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.


மொத்தம் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆளுநர் உரையாற்றி புறப்பட்டார். 15 திருக்குறள்களையும் உரையில் மேற்கோள் காட்டி பேசினார். வழக்கமாக ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்ற தமிழ் உரையை பேரவைத் தலைவர் வாசிப்பார். முதல் முறையாக ஆளுநரே உரையை தமிழில் வாசித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்