தன் வாளை பரிசளித்த பவானி தேவி... அடுத்த ஒலிம்பிக்கிற்கு தயாராக ஊக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல தமிழக அரசு பெரிதும் உறுதுணையாக இருந்ததாக, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், டோக்கியோ ஒலிம்பிக்கை முடித்து சென்னை திரும்பியதாகவும், தான் விளையாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பாராட்டினார் என்றும் கூறினார்.

மேலும், இது என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி என கூறிய அவர், தமிழகம் சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், என்னை மட்டுமல்லாமல், என் தாயாரையும் முதலமைச்சர் பாராட்டியது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் நான் பயன்படுத்திய வாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளிக்க விரும்பினேன். ஆனால், முதல்வர் அடுத்த ஒலிம்பிக்கில் சிறப்பாக பங்களிக்க பயிற்சி மேற்கொள்ள இந்த வாள் உதவும் என அதை எனக்கே திருப்பி அளித்தார் எனவும் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் செல்ல கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் உறுதுணையாக பல உதவிகளை செய்ததாகவும் குறிப்பிட்டார்.

நான் ஏற்கனவே மின்சாரத்துறையில் பணியாற்றி வருவதால், மின்சாரத்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து பல்வேறு வாய்ப்புகள் வருகிறது இருப்பினும் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம் என்றும், பதவி உயர்விற்காக பேசியுள்ளதாகவும், தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு