ஆளுநருடன் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் சந்திப்பு : பொய் வழக்கு போடும் திமுக அரசின் நடவடிக்கைகள் மீது முறையீடு!!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.குறிப்பாக,கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,பேரவையை இரண்டு நாட்கள் புறக்கணிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து,கோடநாடு வழக்கில் தன்னையும்,அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
ஆளுநரிடம் கோடநாடு விவகாரம் தொடர்பாக அவர்கள் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.